தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல் சுவர் அமைக்கும் பணி தீவிரம்!

 
தனுஷ்கோடி

ராமேசுவரம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தனுஷ்கோடி பகுதியில், கடல் சீற்றத்தினால் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதைத் தடுக்கும் பொருட்டு, தெற்கு கடற்கரைப் பகுதியில் பிரம்மாண்டமான பாறாங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் அழிந்து போன தனுஷ்கோடிக்கு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் முகுந்தராயசத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல் முனை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்பட்ட கடந்த 9 ஆண்டுகளில், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடல் நீரோட்டத்தின் வேகம் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் கடல் சீற்றத்திலிருந்து இந்தச் சாலையைப் பாதுகாப்பதற்காக, ஏற்கனவே சாலையின் இருபுறங்களிலும் பாறாங்கற்கள் கொண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது. எனினும், கடந்த ஆண்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீரோட்ட மாறுபாடு காரணமாக, தெற்கு கடற்கரைப் பகுதியில் பல இடங்களில் இந்தத் தடுப்புச் சுவர்கள் பெயர்ந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் சாலைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.

தனுஷ்கோடி

சாலையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கடற்கரையை மேலும் பலப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதலாகப் புதிய தடுப்புச் சுவர்களைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.  இந்த மறுசீரமைப்புப் பணிக்காக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைப் பகுதியிலிருந்து கனரக லாரிகள் மூலம் ராட்சதப் பாறாங்கற்கள் தனுஷ்கோடிக்குக் கொண்டு வரப்பட்டு, அரிச்சல் முனை அருகே உள்ள தெற்கு கடற்கரையில் குவிக்கப்பட்டு வருகின்றன.

பொக்லைன் எந்திரங்கள் மூலம் இந்த ராட்சதக் கற்கள் கடற்கரையில் வரிசையாக அடுக்கப்பட்டு வருகின்றன. கடல் அலையின் வேகத்தால் கற்கள் மீண்டும் சரிந்து கடலுக்குள் விழுவதைத் தடுக்கும் வகையில், இரும்பு கம்பிகளால் வலைப் பின்னல் அமைத்து, 'பாக்ஸ்' வடிவில் இந்தத் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும் அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அரிச்சல் முனை சாலையைச் சுற்றி பாக்ஸ் வடிவில் கட்டப்பட்டு முடிந்துள்ள புதிய தடுப்புச் சுவர்களில் நின்று, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் அலைகளின் சீற்றத்தையும், தனுஷ்கோடி கடற்கரையின் இயற்கை அழகையும் பாதுகாப்பாக நின்று ரசித்துச் செல்கின்றனர்.