பெரும் சோகம்... பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளர் பலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது. இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் பணியில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் மணி ஈடுபட்டு வந்தார். கழிவுநீர் வாகனத்தின் குழாயை பாதாள சாக்கடைக்குள் செலுத்தும் போது திடீரென மணி சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.

அவரை மீட்கும் முயற்சியில் உடன் இருந்தவர்கள் ஈடுபட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷவாயு தாக்கிய மணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
