மானாமதுரையில் கடற்பாசி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயு கசிவால் தொழிலாளி பலி - தனியார் ஆலைக்கு அதிகாரிகள் சீல்!

 
வாயு கசிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டை வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில், இரசாயனம் மற்றும் நச்சு வாயுத் தாக்குதலால் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்ப பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் அந்த தனியார் ஆலையில் வழக்கம்போல கடற்பாசியைப் பதப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராத விதமாகக் கடுமையான அமில மற்றும் நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜேசுதாஸ் (39) என்பவர், அங்கு உருவான அடர்ந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்தபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாயு

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா மற்றும் மானாமதுரை வட்டாட்சியர் (தாசில்தார்) மகாதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டனர்.

தொழிற்சாலையில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா மற்றும் நச்சு வாயு உருவாகக் காரணம் என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மேல் விசாரணைக்காகவும் அந்தத் தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் உடனடியாகத் தற்காலிகமாகச் சீல் வைத்தனர்.

வாயு

இச்சம்பவம் தொடர்பாக மானாமதுரை சிப்காட் காவல்நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, ஆலையின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.