உலக பட்டினி தினம்... இன்று தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!
மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் கூடிய அன்னதானம் வழங்கக் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தவெக அரசியல் இயக்கமாகச் செயல்பட தொடங்கிய காலத்திலிருந்தே பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சூழலில், ஆட்சியைப் பிடித்த பிறகும் இந்த மக்கள் நலப் பணியைத் தொடர விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த அன்னதானத் திட்டம் நாளை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தவெக சார்பு அணி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தரமான மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வழங்கப்படும் உணவானது மிகவும் சுகாதாரமான முறையிலும், தரமானதாகவும் இருப்பதை நிர்வாகிகள் நேரில் நின்று உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்குவதே தங்களது அரசின் முதன்மைக் கொள்கை என்பதைப் பறைசாற்றும் விதமாக, இந்த உலக பட்டினி தினத்தில் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் அன்னதானம் வழங்கத் தவெகவினர் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
