உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்.. இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்!
கத்தாரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில, மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஈஷா சிங், மனு பாக்கர் மற்றும் திவ்யா சுப்பராஜு ஆகியோர் அடங்கிய கூட்டணி அபார திறமையை வெளிப்படுத்தியது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக 1,761 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்திய அணியில் வீராங்கனை ஈஷா சிங் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அதிகபட்சமாக 590 புள்ளிகளைக் குவித்தார்.

இப்பிரிவில் தென் கொரிய அணி 1,748 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் அணி 1,745 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. அணிகள் பிரிவில் தங்கம் வென்று அசத்திய போதிலும், 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகளுக்குப் பதக்கம் கைநழுவியது. தகுதிச்சுற்றில் ஈஷா சிங் 3-வது இடத்தையும், மனு பாக்கர் 6-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இருப்பினும், இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், ஈஷா சிங் 11 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்ததால் முதல் 3 இடங்களுக்குள் வர முடியாமல் ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை இழந்தனர். தோகாவில் நடைபெற்று வரும் இத் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

மகளிர் 25 மீ. ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (தனிநபர்): நிவேதிதா நாயர் (வெண்கலப் பதக்கம்). ஆண்கள் 10 மீ. ஏர் பிஸ்டல் (தனிநபர்): ஜெய்பால் மால்வியா (வெள்ளிப் பதக்கம்). ஆண்கள் 50 மீ. பிஸ்டல் (அணிகள்): ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் கூட்டணி (தங்கப் பதக்கம்).
ஆண்கள் 50 மீ. பிஸ்டல் (தனிநபர்): ரவீந்தர் சிங் (வெள்ளிப் பதக்கம்). மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் (அணிகள்): இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், ஷாம்பவி க்ஷிர்சாகர் கூட்டணி (வெள்ளிப் பதக்கம்).
உலக அளவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
