ரூ.2.40 கோடி மதிப்பு.. ஆஸ்திரேலியாவில் 4,00,000 சிப்பிகளை அள்ளிச் சென்ற கும்பல்!

 
சிப்பி

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிப்பிப் பண்ணையில் நள்ளிரவில் புகுந்த மர்மக் கும்பல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிப்பிகளைத் திருடிச் சென்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள 'தாரீ' பகுதிக்கு அருகில் உள்ள மான்னிங் ஆற்றில் இயங்கி வரும் 'லாடிடியூட் 31 ஆய்ஸ்டர்ஸ்' என்ற சிப்பி பண்ணையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. இங்கு சுமார் 3.50 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி) மதிப்பிலான சிப்பிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பண்ணையின் உரிமையாளர் ரையன் ப்ரீமேன் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பண்ணையில், நள்ளிரவில் படகுகள் மூலம் வந்த திருடர்கள் திட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த உயர்தர 'சிட்னி ராக் ஆய்ஸ்டர்ஸ்' வகைத் சிப்பிகளையும், அதற்கான உபகரணங்களையும் அவர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.

அறுவடைக்குத் தயாராக இருந்த சிப்பிகள், 300-க்கும் மேற்பட்ட பெரிய மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் சுமார் 4 லட்சம் சிப்பிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது அப்பண்ணையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணையில் உள்ள இருப்பை மறுமதிப்பீடு செய்து உறுதிப்படுத்திய பிறகே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாகச் சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான சிப்பிகளைத் தனிப்பட்ட முறையில் விற்க முடியாது என்பதால், சட்டவிரோதச் சந்தைகள் அல்லது உணவகங்களில் இவை விற்கப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குப் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.