கட்டணமின்றி பணப்பரிமாற்றம்... 'எக்ஸ் மணி' நிதி சேவை அறிமுகம்... பயனர்கள் உற்சாகம்!
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தை அனைத்து பயன்பாட்டிற்குமான செயலியாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதன் முக்கிய கட்டமாக 'எக்ஸ் மனி' என்ற புதிய நிதிச் சேவையை அமெரிக்காவில் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளார். முதற்கட்டமாக இந்த சேவை அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும் பிரீமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எக்ஸ் செயலியில் இருந்தபடியே பயனர்கள் வங்கி வைப்புக் கணக்கு தொடங்குதல் மற்றும் பணப் பரிமாற்றம் போன்ற சேவைகளைப் பெற முடியும்.
இந்த புதிய சேவை மூலம் ஒருவருக்கொருவர் உடனடி பணப் பரிமாற்றம் மற்றும் மின்கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம். மேலும் வங்கி பணப் பரிமாற்றம் மற்றும் காசோலை அனுப்புதல் போன்ற பல நிதி சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்த முடியும். எக்ஸ் மனி சேவையில் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
பயனர்கள் அமெரிக்காவின் கிராஸ் ரிவர் வங்கியில் வைப்புக் கணக்கு தொடங்கி தடையின்றிப் பயன்படுத்தும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.இதனுடன் எக்ஸ் பயனர்களுக்கிடையே எந்தக் கட்டணமும் இல்லாமல் உடனடி பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி சம்பள வரவு வசதிகள் உள்ளன. அஞ்சல் மூலம் காசோலை அனுப்புதல் மற்றும் கட்டணமில்லா ஏடிஎம் பணம் எடுக்கும் வசதிகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கின்றன. நிதி சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் 'எல்லாவற்றிற்குமான செயலி' என்ற இலக்கை எலான் மஸ்க் இதன் மூலம் எட்டியுள்ளார்.
