200 பெண்களின் ரகசிய வீடியோக்கள்... ஜெராக்ஸ் கடைக்காரர் பகீர்!
நெல்லை பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு இளம்பெண் ஒருவர் நேற்று சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி என்பவர், அந்த பெண்ணுக்குத் தெரியாமல் தனது கைபேசி மூலம் அவரை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனைத் தற்செயலாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக தனது வீட்டிற்குச் சென்று நடந்த விபரத்தைத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த கடைக்குச் சென்று உரிமையாளரிடம் இது குறித்துக் கேட்டுள்ளனர். இதனால் பயந்துபோன முகமது அஸ்ரப் அலி, தனது கைபேசியை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடி தலைமறைவானார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அந்த கைபேசியை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் அந்த கைபேசியை வாங்கி தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கைபேசியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை தெரியாமலேயே ஆபாசமாக வீடியோ எடுத்துச் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு உரிமையாளர் இந்த முறைகேடான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப முறைகேடு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முகமது அஸ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
