தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்’ - 3 நாட்கள் வெப்ப அலை எச்சரிக்கை!

 
உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூலை 17-ம் தேதி வரை அடுத்த மூன்று நாட்களுக்குக் கடுமையான வெப்ப அலை  நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றும், நாளையும்தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். இதன் காரணமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 19 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் நிற' வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை சுணக்கம், மேகமூட்டம் குறைவு மற்றும் வறண்ட மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த திடீர் வெப்ப உயர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகப்படியான வெப்பநிலையுடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், கடுமையான உஷ்ணமும் உடல் சார்ந்த அசௌகரியங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 38 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றிப் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

 வெயில்

தாகம் எடுக்காவிட்டாலும் போதிய அளவு நீரைக் குடிக்க வேண்டும். இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அதிகமாகப் பருகலாம். வெளியில் செல்லும்போது தளர்வான, வெளிர் நிறப் பருத்தி ஆடைகளை அணிவது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

விவசாயிகள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது வேலை நேரத்தைச் சற்றே மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், கால்நடைகளையும் நிழலான இடங்களில் கட்டிப் பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.