புறப்படத் தயாரான விமானம் அருகே விழுந்த 2 ஏவுகணைகள்... பெரும் பரபரப்பு!

 
ஏடன்

 

 

ஏமன் நாட்டின் ஏடன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவியதாகக் கூறப்படும் 2 ஏவுகணைகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

ஏமன் தகவல் துறை மந்திரி மொஅம்மர் அல்-எர்யானி வெளியிட்ட தகவலின்படி, கெய்ரோவுக்குப் புறப்படவிருந்த விமானத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், ஓடுபாதையின் மையப்பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும் ஏவுகணைகள் விழுந்தன. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. விமான நிலையத்தைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹவுதிகள், அப்பகுதியில் உள்ள சவுதி படைகளின் கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்கை இலக்காகக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.