"பாம்பைக் கூட நம்பலாம்.. ஆனா பாஜகவை நம்பக் கூடாது!" - மம்தா ஆவேசம்!
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் களம் உச்சகட்டப் போர்க்களமாக மாறியுள்ள நிலையில், பாஜகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. "பாம்பைக் கூட நம்பிவிடலாம், ஆனால் பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது" என அவர் பேசியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பாஜக அரசைச் சரமாரியாகக் குற்றம் சாட்டினார். "இன்று இந்தியாவில் எந்தவொரு அமைப்பும் நடுநிலையுடன் செயல்படவில்லை. அனைத்து அமைப்புகளையும் பாஜக விலைக்கு வாங்கிவிட்டது" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பாஜகவின் தேர்தல் தந்திரங்களைக் கடுமையாகச் சாடிய அவர், சில அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "அசாம் தேர்தலின் போது உத்தரபிரதேசத்தில் இருந்து ஒரு ரயில் நிறைய 50 ஆயிரம் ஆட்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதே தந்திரத்தை இப்போது மேற்கு வங்கத்திலும் பாஜக அரங்கேற்றத் துடிக்கிறது."
"வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வருவதற்காகவே, இங்குள்ள நேர்மையான அதிகாரிகள் தேர்தல் ஆணையம் மூலம் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். வெளியிலிருந்து ஆட்கள் மட்டுமல்ல, வாக்காளர்களைக் கவரப் பணம் மற்றும் போதைப்பொருட்களையும் பாஜகவினர் கொண்டு வருகின்றனர். ஆனால், எனது கட்சியினர் (TMC) அவர்கள் அனைவரையும் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெறுவார்கள்" என மம்தா கர்ஜித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், தனது கோட்டையைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி மிகத் தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக, "வெளியூர் ஆட்கள்" என்கிற அஸ்திரத்தை ஏவுவதன் மூலம், மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளைத் தூண்டி விட அவர் முயன்று வருகிறார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றியது போலவே, மேற்கு வங்கத்திலும் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவது மம்தாவுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "பாம்பை விடக் கொடியது பாஜக" என மம்தா பேசியிருப்பது, தேர்தல் களத்தில் இரு தரப்பினருக்கும் இடையேயான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த அதிரடிப் புகார்களுக்கு பாஜக தரப்பு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு!
