"இனி கனவில் கூட நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது" - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பரபரப்பு!
தமிழகச் சட்டப்பேரவையில் வீடுகள் மற்றும் மேம்பாலங்களின் தரம் குறித்த விவாதத்தின் போது, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சர்களுக்கிடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.
வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் பேசுகையில், "கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து தொங்கும் நிலையில் உள்ளன. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பலமாக இருக்கும்" என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "இந்திரா காந்தி காலம் முதலே வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில்தான் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக ரூ. 50,000-க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டது. நீங்கள் ரூ. 5 லட்சத்தில் நல்ல முறையில் வீடுகளைக் கட்டிக் காட்டுங்கள்" எனக் குறிப்பிட்டார்.

குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், "நாங்கள் எதைச் செய்தாலும் சரியாகவே செய்வோம். நீங்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்; இனி நீங்கள் கனவு கண்டாலும் ஆட்சிக்கு வர முடியாது" எனத் தெரிவித்தார்.
"நாங்கள் சுயநல அரசியல்வாதிகள் அல்ல, மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதங்களே ஆன நிலையில், மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களை நம்புகிறார்கள். நாங்கள் தவறு செய்ய மாட்டோம்" என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தவெக அமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்த திமுக உறுப்பினர் கோ.வி. செழியன், "தவெக அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவாகித் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது" சுட்டிக்காட்டினார்.
திமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் மூன்றே மாதத்தில் சேதமடைந்தது குறித்துப் பேசி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை விமர்சித்தார். அதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, "54,600 கன அடி நீரைத் தாங்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தில், வரலாறு காணாத மழையால் 3 லட்சம் கன அடி நீர் பாய்ந்ததால் இயற்கை சீற்றத்தால் மட்டுமே பாலம் சேதமடைந்தது" என விளக்கமளித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஒவ்வொரு ரூபாய்க்கும் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரங்கள் விரைவில் வெளிப்படையாகத் தெரியவரும்" எனத் தெரிவித்தார்.
