“நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்!” - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைதுக்குப் பின் எடப்பாடி ஆவேசம்!

 
கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கைக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்” என முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற த.வெ.க.-வின் பாலியல் கைது! முதல்வர் விஜய் அவர்களே.. Just a Reminder..  நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

மேலும் அப்பதிவில், “இந்த வழக்கில், ‘அப்படி ஒன்று நடக்கவே இல்லை’ என்று வதந்தி பரப்பிப் பொய் சொன்னவர், அவரைப் பொய்யைச் சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்தக் குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் வீட்டிலிருந்து அவரை இன்று மாலை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ்

சுமார் 117 நாட்களாக இழுபறியில் இருந்த இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் மற்றும் உயர்நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.