"சொந்த வீட்டிலேயே 3 ஓட்டு கிடைக்காது... தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சல்மான் கான்!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சல்மான் கான், தான் ஏன் அரசியல் பக்கமே தலைவைத்துப்பார்ப்பதில்லை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதற்கான காரணத்தை மிகவும் கலகலப்பான பாணியில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'தி கபில் சர்மா ஷோ' நிகழ்வில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறியுள்ளார். திரைத்துறையில் உச்சகட்டப் புகழில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களை அரசியல் கட்சிகள் தங்களது பக்கம் இழுத்து, தேர்தலில் போட்டியிட வைப்பது வழக்கமான ஒன்றுதான். இதனை முன்வைத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் சர்மா, "உங்களுக்குப் பல அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்புகள் வந்திருக்குமே, உங்களுக்கு எப்போதாவது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?" எனச் சல்மான் கானிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எவ்வித பந்தாவும் இன்றி, தனது வழக்கமான எதார்த்தமான பாணியில் சல்மான் கான் பதிலளித்தார். "எனக்குக் கூட பலமுறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் தோன்றியதுண்டு. ஆனால், உடனே நான் வசிக்கும் எனது அடுக்குமாடி குடியிருப்பை நினைத்துப் பார்ப்பேன். எங்கள் குடியிருப்பில் மொத்தம் 8 வீடுகள் உள்ளன. அதில் 3 வீடுகள் எங்களுடையதுதான்.
நாட்டின் பிரதமர், அமைச்சர், எம்பி, எம்எல்ஏ போன்ற பெரிய பதவிகளை எல்லாம் விட்டுவிடுங்கள்; எனது சொந்தக் குடியிருப்பின் செயலாளர் தேர்தலுக்கான பதவியில் நான் போட்டியிட்டால் கூட, நான் மோசமாகத் தோற்றுவிடுவேன். ஏன் தெரியுமா? என் சொந்த வீட்டிலிருந்தே எனக்கு அந்த 3 ஓட்டுகள் கூட ஒழுங்காகக் கிடைக்காது" என்று சல்மான் கான் மிகவும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் குதித்தால் தன் குடும்பத்தினரே தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சல்மான் கான் தன்னைத்தானே சுயகிண்டல் செய்து கொண்டு பேசிய இந்த நகைச்சுவையான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.
