பகீர்... கணவரைத் தண்ணீர் தொட்டியில் அமுக்கிக் கொன்ற பிரபல பெண் யூடியூபர் !

 
ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் மல்புரா பாண்டா பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் தண்ணீர் தொட்டியில், கடந்த 4-ம் தேதியன்று தேஜாராம் என்ற 42 வயது நபர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜாலூர் மாவட்டத்தில் கட்டிட வேலை பார்த்து வந்த இவரது மரணம் குறித்து உள்ளூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து தங்களது விசாரணையைத் தொடங்கினர். இந்தத் தீவிர விசாரணையில், தேஜாராமின் மனைவியான சமூக வலைதள பிரபலமான 36 வயது நேட்டல் என்பவருக்கும், மித்ரா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது வாடகை கார் ஓட்டுநர் குமான்சிங் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் செயலி மூலமாகவே கார் ஓட்டுநருடன் அந்த பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வேலை காரணமாகத் தேஜாராம் வெளியூரில் தங்கியிருந்த நிலையில், இந்த விவகாரம் அவருக்குத் தெரியவந்ததால் தம்பதி இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த நேட்டல், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி தான் வீட்டை விட்டு ஓடிவிடுவதாகக் கூறி, தனது கைபேசியை அந்தப் பெண் அணைத்து வைத்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த தேஜாராம், மனைவியைத் தேடி அலைந்த போது கள்ளக்காதலன் குமான்சிங்கைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து தேடலாம் என ஆசை வார்த்தை கூறி தேஜாராமைத் தனியாக வரவழைத்து, அவருக்கு அதிக அளவில் மதுவை ஊற்றிக் கொடுத்துக் காரில் கடத்தியுள்ளனர். பின்னர் மயக்கமடைந்த தேஜாராமை மல்புரா பாண்டா பகுதிக்குக் கொண்டு சென்று, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள கள்ளக்காதல் ஜோடியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.