"நேப்பியர் பாலத்துக்கு கீழே தொங்க விடுவீங்க... அமைச்சர் கீர்த்தனா வாயைத் திறந்தாலே பொய் தான்" - மேயர் பிரியா
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தவெக அரசு மற்றும் அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக அமைச்சர்களுக்குத் தங்களின் பொறுப்பு என்னவென்பதே தெரியவில்லை என்றும், எப்போதும் ரீல்ஸ் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்றும் மேயர் பிரியா சாடினார்.

அப்போது பேசிய அவர், "கீர்த்தனா என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார். சட்டமன்றத்திலேயே பொய்யான தகவலைப் பேசிவிட்டு, பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் எனக் கூறுகிறார். இப்படித்தான் தவெக ஆட்சியில் லட்சணம் இருக்கிறது" என்றார்.
"இன்று 7, 8 வயது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள். இப்போது எங்கு சென்றீர்கள்? சினிமாவில் வருவது போல், 'நேப்பியர் பாலத்துக்குக் கீழே தொங்கவிடுவாங்க' என்று ஓட்டுப் போட்ட மக்களுக்குச் சின்ன பாதுகாப்புக்கூட கொடுக்க முடியாத அளவுக்குத் தான் இன்றைய தமிழ்நாடு அரசு உள்ளது" என்று அவர் கடுமையாகக் விமர்சித்தார்.

"நாம் ரீல்ஸ் போட்டு ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கொள்கை இருக்கு, தலைவர் இருக்காரு, சின்னவர் இருக்காரு" என்றும் மேயர் பிரியா கூட்டத்தில் தெரிவித்தார்.
