ஆபாசமாக படமெடுத்து , மிரட்டி ரூ.4 லட்சம் வரை பணம்பறிப்பு... குத்துசண்டைப் பயிற்சியாளர் மீது இளம்பெண் புகார்!
மதுரையில், ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக குத்துச் சண்டை பயிற்சியாளர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனக்கு 2 மகன்கள். மூத்தமகன், தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டும், இளைய மகன் 10ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதால், தையல் கடை வைத்து நடத்தி வருகிறேன்.
எனது இளைய மகனுக்கு குத்துச்சண்டை கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டதால், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள இலவச குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க மகனை அனுப்பி வைத்தேன்.
மதுரையைச் சேர்ந்த தேவராஜ் (30), மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) ஆகியோர் எனது மகனுக்கு குத்துசண்டை பயிற்சி வழங்கி வந்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளுக்கும் எனது மகனை அழைத்துச் சென்றனர். இந்த நம்பிக்கையில் நானும் எனது மகனை அவர்களுடன் அனுப்பி வைத்தேன்.
அவர்களே, வாகனத்தில் கொண்டு வந்து என் மகனை வீட்டில் இறக்கி விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இது போன்ற சூழலில் எனது செல்போன் எண்ணையும் அவர்கள் இருவரும் வாங்கிக் கொண்டனர். இதன்பின் இருவரும் என்னிடம் மகன் குறித்து அவ்வப்போது என்னிடம் பேசி வந்தனர்.
இந்நிலையில் மகனுக்கு தேர்வு நடந்ததால், அவனை பயிற்சிக்கு அனுப்பாமல் இருந்து வந்தேன். சம்பவத்தன்று தேவராஜ், ராஜ்குமார் செல்போனில் என்னிடம் பேசினர். அப்போது நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருப்பதாக கூறினேன். அங்கு வந்த அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி என்னை ஆபாசமாக புகைப்படங்களை எடுத்தனர். மேலும், அந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியும், எனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டினர்.
வேறு வழியின்றி நானும் பல்வேறு தவணையில் ரூ.4 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்திருக்கிறேன். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டி வருகின்றனர். வேறொரு எண்ணில் இருந்து ஆபாச படங்களை எனக்கே அனுப்பி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு என்னை வரவைத்து நான் அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டனர். யாரிடமாவது இது குறித்து கூறினால், என்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, எனது ரூ.4 லட்சம் பணம், நகையை மீட்டு தரவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.