7 ஏக்கர் நிலத்துக்காக இளைஞர் நடுரோட்டில் கோடரியால் வெட்டிக்கொலை ... பட்டப்பகலில் பயங்கரம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 7 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில், 23 வயது இளைஞர் பட்டப்பகலில் நடுரோட்டில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்தா மாவட்டம் கோத்ரி கிராமத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ராகேஷ் யாதவ் (23), தனது விதவை சகோதரிக்குச் சேர வேண்டிய 7 ஏக்கர் நிலத்தில் உரிய பங்கைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உறவினர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உறவினர்களான லால் சிங் யாதுவன்ஷி மற்றும் அவரது மகன் ஜிதேந்திரா ஆகியோர் ராகேஷைத் தாக்கியதாகத் தெரிகிறது. கோடரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக லால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த அவரது மகன் ஜிதேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.நிலத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
