“இளைய புரட்சித்தலைவியா..? வெட்கக்கேடு!” - திருப்பரங்குன்றம் தீபம் முதல் செஞ்சி சிறுமி வழக்கு வரை அண்ணாமலை ஆவேசம்!

 
த்ரிஷா

திருநெல்வேலியில் நடிகை த்ரிஷா பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ தொடங்கப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிஐ விசாரணை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம், தொழில்துறை முதலீடுகள் மற்றும் இடைத்தேர்தல் தயாரிப்புகள் குறித்துப் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஈகோ பார்க்காமல் சிபிஐ விசாரணை கோரி உடனடியாகக் கடிதம் எழுத வேண்டும் என வலியுறுத்தினார். சிபிஐ அதிகாரிகளாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு வர முடியாது என்றும், தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டுமே சிபிஐ விசாரணையைத் தொடங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

த்ரிஷா

திருப்பரங்குன்றம் மலைத்தூண் விவகாரத்தில் அரசே பிரச்சனையை உருவாக்கக் கூடாது என்று கூறிய அவர், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைய விட மாட்டோம் என்று கூறிச் சூழலைக் கெடுத்துவிட வேண்டாம் எனத் தெரிவித்தார். மேலும், நாளை  மலைத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ தொடங்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! இதுதான் தமிழ்நாடா?” எனக் கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் தொழில்துறையை வளர்க்க ஜப்பான், கொரியா என வெளிநாடுகளுக்குச் செல்லாமல், கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் முதலீட்டாளர் கூட்டங்களை நடத்தி உள்ளூர் தொழிலதிபர்களை உள்நாட்டிலேயே முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தினார்.

அண்ணாமலை

2014 தேர்தலில் தனித்து நின்றபோது 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், 2019 மற்றும் 2024 தேர்தல்களில் திமுக  கூட்டணியால் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார். அன்று திமுக, இன்று தவெக எனப் பயணிக்கும் மாணிக்கம் தாகூர், ராகுல் காந்திக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்கவும், விஜய் வீட்டுக்கு அழைத்து செல்லவும் உதவும் டிராவல் ஏஜெண்ட் போலச் செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.

தாங்கள் பாஜகவின் முகமூடியோ அல்லது தவெக, காங்கிரஸின் 'பி' டீமோ அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அண்ணாமலை, நடுநிலையாக நின்று புதிய அரசியலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஜனவரியில் தமிழகத்தின் 6 காலியான தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ள நிலையில், மக்கள் முன் சமூகப் பிரச்சனைகளை முன்வைத்துத் தாங்கள் தயாராகி வருவதாகவும், கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.