மதம் மாறி காதல்... இருவீட்டார் எதிர்ப்பால் இளம் பெண் விபரீத முடிவு!

 
karnataka karnataka


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் பூமிகா. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான டோங்ரிசாப் என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டில் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் உறவினர்களுக்குத் தெரியவரவே, வீட்டில் மீண்டும் மோதல் வெடித்தது. இதனால் மனமுடைந்த பூமிகா, தனது காதலுக்கு விடிவு காலம் பிறக்காது என்ற வேதனையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூமிகாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா அல்லது மிரட்டல்கள் விடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் இந்த விபரீத முடிவு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.