“உங்கள் பிரார்த்தனையே என் வலிமை!” - ஐசியூ-வில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "காலில் ஏற்பட்ட தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் முழுமையாகக் குணமடைந்து உங்களிடையே வருவேன். உங்கள் பிரார்த்தனையே என் வலிமை, உங்கள் நம்பிக்கையே என் மருந்து. கோவை வடக்கில் தேர்தல் பணியாற்றும் பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் தொய்வின்றிப் பணியாற்ற வேண்டும். நாம் விரைவில் சந்திப்போம், வெற்றியைத் துணிச்சலோடு கொண்டாடுவோம்."
வணக்கம் 🙏
— Vanathi Srinivasan (@VanathiBJP) April 13, 2026
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி 🙏
இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.
உங்கள்… pic.twitter.com/RoZmAfMphZ
தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கோவை வடக்குத் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வானதி சீனிவாசன் வீடியோ மூலம் நேரடியாகப் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்துள்ளது.

அவர் இல்லாத நேரத்திலும், தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வாக்குச் சேகரிப்புப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். வானதி சீனிவாசன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், அதன் பிறகு இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் அவர் பங்கேற்பார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
