“எங்கள் வலிமையைப் பார்க்கப் போகிறீர்கள்!” - அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீதானத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைக் குறிவைப்பது ஈரானியர்களின் அறிவாற்றலை முடக்கும் முயற்சி என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்காசியப் போர் அபாயகரமானக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

ஈரானின் முதன்மையான கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமான ஷரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதி, அறிவியல் மற்றும் கலாசார மையக் கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகள் மீதும் குண்டுகள் விழுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறித் தப்பியோடினர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைதூர விண்மீன் கூட்டத்தில் அறிவு ஒளிந்திருந்தாலும், அதனைத் தேடி அடையும் திறன் ஈரானியர்களுக்கு உண்டு. எங்களது அறிவுத்திறனையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் முடக்க நினைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் (அமெரிக்கா - இஸ்ரேல்), விரைவில் எங்களது உண்மையான வலிமையைப் பார்க்கப் போகிறார்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்திற்கு இந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் முதுகெலும்பாக விளங்குவதால், அவற்றைத் தகர்ப்பதன் மூலம் ஈரானின் ராணுவ வலிமையைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் வேகம் எடுத்துள்ளன.
