போதை பிரியர்களின் கவனத்திற்கு.. அதிக அளவில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் மரணம்..!!

 
புளியந்தோப்பு சதீஷ்

அளவுக்கு அதிகமாக போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணி மற்றும் வேலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருக்கின்றார்கள். மணி மற்றும் அவரது மனைவி வேளா ஆகியோர் வில்லிவாக்கம் பகுதியில் பூ மற்றும் மாலை கடை வைத்து வருகின்றார்கள். இவர்களுடைய இளைய மகன் சதீஷ் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக போதைக்கு அடிமையாகி மூன்று மாதங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அதிகப்படியான போதை ஊசியை தனது கழுத்தில் செலுத்திக் கொண்டுள்ளார். இதனை அடுத்து சதீஷ் மயக்க நிலையில் இருப்பதாக சதீஷின் அத்தை லதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சதீஷின் அத்தை லதா ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது சதீஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சதீஷ் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களிடையே போதை ஊசி பழக்கம் அதிர்ச்சி

இது தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டைக்லோபின் என்கிற போதை மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் கழுத்தில் ஊசி மூலமாக மேற்கொண்டதால் சோடியம் அளவு அதிகரித்து இறப்பிற்கு காரணமாக அமைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ் பயன்படுத்திய ஊசி மற்றும் மருந்துகளை எந்த இடத்தில் வாங்கி உள்ளார். இவருக்கு யார் கொடுத்தது என்ற பல்வேறு கோணங்களில் புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web