சதுரகிரி மலையேறிய இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழப்பு - ஆடி அமாவாசையில் சோகம்!
ஆடி அமாவாசையை முன்னிட்டுச் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்ற இளைஞர் ஒருவர் மலையேறும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலதிருமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (33) என்பவர் ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டிச் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமியைத் தரிசிப்பதற்காகச் சிவகுமார் மலையேறியுள்ளார்.

சதுரகிரி மலையேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிவகுமாருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகுமாரின் உடலை டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துச் சாப்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
