விருதுநகர் அருகே நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்கள் தப்பியோட்டம்!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கல்குவாரி மேற்பார்வையாளர் மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), தற்போது மண்டலமாணிக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி பகுதியிலுள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்துவிட்டு இன்று காலை திருச்சுழி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருச்சுழி - பனையூர் சாலை இடையே மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை வழிமறித்துள்ளனர்.
மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் சிதைந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் இருவரும் தாங்கள் வந்த வாகனத்திலேயே தப்பியோடினர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற திருச்சுழி டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான காவல்துறையினர், ஆகாஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும், தப்பியோடிய கொலையாளிகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
