டாஸ்மாக் கடையில் வரிசையில் தகராறு - இளைஞர் கழுத்து அறுபட்டு படுகொலை!

 
கொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது, அங்கு நின்றிருந்த சிலருக்கும் பிரகாஷ் (30) என்பவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை பின்னர் கைகலப்பாக முற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தவெக உண்மை சரிபார்ப்பகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மோதலின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரகாஷைத் தள்ளியதாகவும், அப்போது அவர் அருகில் இருந்த சாலையோர உணவகமான 'ஸ்வாமி டிபன் சென்டர்' பலகையின் கூர்மையான விளிம்பில் விழுந்ததால் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்துச் சமயபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்காக அந்த டாஸ்மாக் கடையைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.