பொண்டாட்டியோடு சேர்த்து வையுங்க... 130 அடி உயர டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!

 
செல்போன் டவர்
 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 130 அடி உயர செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் மகாலிங்கம்(30). கொத்தனாராக வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி முத்துமாரி மற்றும் குழந்தைகளுடன் தற்போது கீழவிளாத்திகுளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 130 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார்.

அதன் பின்னர், "தனக்கும் தனது மனைவி முத்துமாரிக்கும் பிரச்சனையாக இருக்கிறது. மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள். இல்லையென்றால் கீழே குதித்து செத்து விடுவேன் என்று கூறினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரிலேயே அமர்ந்து கொண்டு அலப்பறை செய்து வந்தார். 

செல்போன் டவர்

இதையடுத்து காவல்துறையினர் மகாலிங்கத்தின் மனைவி முத்துமாரியை வரவழைத்து மகாலிங்கத்தை டவரில் இருந்து கீழே இறங்கி வரச் சொல்லுமாறு மைக் கொடுத்து பேச செய்தனர். 

பின்னர் மகாலிங்கத்தின் குழந்தையை வரவழைத்து குழந்தையையும் பேசச் செய்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பல கட்ட முயற்சிகள் செய்தும், பலமுறை இறங்கி வரச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியும் விடாப்பிடியாக மகாலிங்கம் கீழே இறங்கி வரமாட்டேன். எனக்கு நம்பிக்கை இல்லை என்று விரக்தியாக பேசிக்கொண்டே டவரின் மேலேயே அமர்ந்து கொண்டும், தொங்கிக் கொண்டும் விழுந்து விடுவேன் என்று கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து நீண்ட நேரமாக இறங்கி வர சொல்லியும் கேட்காததால் மகாலிங்கத்தின் மனைவி கோபித்துக் கொண்டு தனது மகனை அங்கிருந்து கூட்டிச் சென்றார். இதைக் கண்ட மகாலிங்கம், அங்கிருந்த பெண் உதவியாளரிடம், “பாருங்க மேடம்... எப்படி போறான்னு” என்று சொல்லி, “எனக்கும் அவளுக்கும் எந்த உறவுமில்லை என்று அவளிடம் எழுதி வாங்குங்கள். என்னுடைய குழந்தையை எனக்கு மீட்டுத் தாருங்கள். அப்படி செய்தால் தான் நான் இறங்கி வருவேன்” என்று கூறினார். 

ஆம்புலன்ஸ்

முதலில் தன் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறிய மகாலிங்கம் திடீரென்று ட்விஸ்ட் கொடுத்து தனக்கு மனைவி வேண்டாம், தன்னுடைய குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று பேசி போலீசாருக்கு பெரும் டார்ச்சர் கொடுத்தார். காவல்துறை அதிகாரிகளும் பொறுமையாக மகாலிங்கத்தின் பேச்சுக்கெல்லாம் சரி....சரி... என பதில் அளித்து அவரை கீழே இறங்க வைக்கும் முயற்சியிலேயே முனைப்புடன் செயல்பட்டனர். 

அதுமட்டுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.  பின்னர், மகாலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பலனாக செல்போன் டவரில் இருந்து மகாலிங்கம் கீழே  இறங்கி வந்தார். உடனடியாக மகாலிங்கத்திற்கு குடிக்க தண்ணீர் கொடுத்து காவல்துறையினர் அவரை பத்திரமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தற்காலை முயற்சி செய்த மகாலிங்கத்தின் மீது விளாத்திகுளம் காவல் துறையினர் IPC 309 (BNS 226)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.