மயிலாப்பூரில் விஜய் கெட்டப்-ல் வாக்களிக்க வந்த இளைஞர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) நான்கு முனைப் போட்டியுடன் கலைகட்டியுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. முதல்முறையாகத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள், மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ.டி (SIT) கல்லூரி வாக்குச்சாவடிக்குத் தங்கள் தலைவரைப் போலவே உடை அணிந்து வந்து அசத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் படங்களில் அணிவது போன்ற கருப்பு மற்றும் வெள்ளை நிறச் சட்டைகள், கழுத்தில் கட்சித் துண்டு என 'தளபதி' கெட்டப்பில் வந்த அந்த இளைஞர்களைப் பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தங்களது முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் உற்சாகத்தில், "நாங்களும் வாக்களிக்க வருகிறோம்" என்ற பாணியில் அவர்கள் வரிசையில் நின்றது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மயிலாப்பூர் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தவெக இளைஞர் அணியினர் இதேபோல் சீருடை அணிந்து வந்து வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே அதிகாலையிலேயே நடிகர் அஜித் வாக்களித்துச் சென்ற பரபரப்பு அடங்குவதற்குள், விஜய் பாணியில் வந்த இளைஞர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் கட்சியின் முதல் தேர்தல் என்பதால், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும், தங்கள் பலத்தைக் காட்டவும் தவெக தொண்டர்கள் இந்த நூதன முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர்.
