தனியார் பேருந்தை திருடிச் சென்ற இளைஞர்கள்... சேற்றில் சிக்கியதால் கைவிட்டு தப்பியோட்டம்!

 
திருட்டு

கேரளாவில் நள்ளிரவில் தனியார் பேருந்தை திருடிச் சென்ற மூன்று இளைஞர்கள், வாகனம் சேற்றில் சிக்கியதால் அதனை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு - கொயிலாண்டி வழித்தடத்தில் இயங்கும் 'செனோ' என்ற தனியார் பேருந்து, வழக்கமான சேவைகளை முடித்துவிட்டு கொயிலாண்டி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்கே வந்த மூன்று இளைஞர்கள், யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்தப் பேருந்தைத் திருடிச் சென்றனர்.

பேருந்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற அந்த இளைஞர்கள், பொயில்காவு பகுதி பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்குத் திருப்ப முயன்றுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்திலிருந்த ஆழமான சேற்றில் இறங்கி அருகில் இருந்த வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்றது.

பேருந்தைச் சேற்றிலிருந்து மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினர். எனினும், பேருந்தின் உள்ளே இருந்த அன்றைய பயண வசூல் பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் பேருந்து சாய்ந்து கிடப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், உரிமையாளர் சலாஹுதீன் மற்றும் கொயிலாண்டி போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, இரண்டு பெரிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பந்தலாயினி பகுதியைச் சேர்ந்த அபினவ் (21) என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இரு தேடப்படும் நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.