புதிய ஏ.ஐ முகப்பு பக்க வசதியை அறிமுகம் செய்தது யூடியூப்
உலகளவில் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களின் முதன்மைப் பொழுதுபோக்குத் தளமாக விளங்கும் யூடியூப், தனது பயனர்களுக்கு முற்றிலும் புதிய டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான புதிய "தனிப்பயன் முகப்பு பக்க"வசதியைச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் தேடித் தேர்வு செய்ய முடியும்.
தற்போதுள்ள நடைமுறையில், பயனர்கள் பார்க்கும் வீடியோக்களின் அடிப்படையிலேயே யூடியூப் அல்காரிதம் முகப்பு பக்கத்தில் வீடியோக்களைப் பரிந்துரைத்து வருகிறது.
ஆனால், தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்குத் தேவையான அல்லது தங்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட தலைப்புகளை நேரடியாகக் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடும் தலைப்புகளுக்கு ஏற்ப, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர்களின் முகப்பு பக்கம் பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தேவையில்லாத வீடியோக்கள் முகப்பு பக்கத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும்.
யூடியூப் நிறுவனத்தின் இந்த அதிநவீன ஏ.ஐ முகப்பு பக்க வசதி தற்பொழுது முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு பெறப்படும் பயனர் கருத்துக்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்குப் பிறகு, விரைவில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள அனைத்து யூடியூப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த வசதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஏ.ஐ அம்சம் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
