யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்துச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி குறித்து 'சவுக்கு.நெட்' இணையதளத்தில் அவதூறான கட்டுரைகள் வெளியிடப்பட்டதாகவும், தன்னை மிரட்டிப் பணம் கேட்டதாகவும் மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்தி, IPC 509 மற்றும் தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கரைக் குற்றவாளி என அறிவித்துத் தீர்ப்பளித்தார்.
இவற்றுக்காக அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
