இலக்கை அடைய 500 மீட்டர் மட்டுமே! அரை மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த 25 வயது வீராங்கனை உயிரிழப்பு

 
தென்கொரியா

 

தென்கொரியாவில் அரை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 25 வயது ஓட்டப்பந்தய வீராங்கனையும் சமூக வலைதளப் பிரபலமுமான யூ ஜி-வான், இலக்கை அடைய இன்னும் 500 மீட்டர் மட்டுமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அறிவியல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலக்கை நெருங்கியபோது மயங்கி விழுந்தார்

தென்கொரியாவின் சியோல் நகரில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி 2026 சியோல் ரேஸ் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற யூ ஜி-வான், 21 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் 20.6 கி.மீ. தூரத்தைக் கடந்திருந்தார். இலக்கை அடைய சுமார் 500 மீட்டர் மட்டுமே எஞ்சியிருந்தபோது, காலை 8.49 மணியளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் உயிரிழந்ததாகப் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. அவரது மரணத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அறிவியல் ஆராய்ச்சியிலும் ஓட்டப்பந்தயத்திலும் ஆர்வம்

யூ ஜி-வான், தென்கொரியாவின் புகழ்பெற்ற அறிவியல் கல்வி நிறுவனமான கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் (KAIST) செயற்கை நுண்ணறிவு சார்ந்த செமிகண்டக்டர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதே நேரத்தில், ஓட்டப்பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது பயிற்சிகள் மற்றும் போட்டி அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற குன்சான் சேமங்கேம் மாரத்தானில் 10 கி.மீ. பிரிவில் பெண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்றிருந்தார். அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து நண்பர்கள், சக ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.