பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார் ஜிடேன்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தோல்வியைத் தொடர்ந்து, பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டிடியர் டெசாம்சின் 14 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் 54 வயதான ஜினடின் ஜிடேன் பொறுப்பேற்க உள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு புதிய பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பாரிஸில் உள்ள பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஜூலை 28 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், புதிய பயிற்சியாளரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

ஜிடேன் 2030 உலகக் கோப்பைத் தொடர் வரை பிரான்ஸ் அணியை வழிநடத்தும் வகையில் 4 ஆண்டுகள் கொண்ட நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் அணிக்கு பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்த டிடியர் டெசாம்ஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, 4-ஆம் இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து டெசாம்ஸ் தனது பதவியை முடித்துக் கொண்டார்.
2012-ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற டெசாம்ஸ், 2018-ல் உலகக் கோப்பை, 2021-ல் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளை வென்று கொடுத்து, 2022 உலகக் கோப்பையிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

1998-ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றபோதும், 2000-ல் யூரோ கோப்பையைக் கைப்பற்றியபோதும் அணியின் முதன்மை வீரராக ஜிடேன் ஜொலித்தார். ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஜிடேன், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
2021-க்குப் பிறகு எந்தவொரு கிளப் அணிக்கும் பயிற்சியாளராகச் செயல்படாமல் இருந்த ஜிடேன், செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள 'யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக்' தொடரில் துருக்கி மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலிருந்து பிரான்ஸ் அணியின் புதிய சகாப்தத்தைத் தொடங்கவுள்ளார்.
