'அரட்டை பிசினஸ்' செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ நிறுவனம் - அரசு, பொதுச் சேவைகளுக்கு முற்றிலும் இலவசம்!
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தனது புதிய 'அரட்டை பிசினஸ்' செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கட்டணக் கொள்கைக்குப் போட்டியாக ஜோஹோ இந்த அதிரடி நடவடிக்கையைக் களம் இறக்கியுள்ளது.
ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் பொது நல சேவைகளும் இந்தச் செயலியை எத்தகைய கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
வர்த்தக நிறுவனங்களைத் தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனங்களுக்கு மாதம் 10 லட்சம் மெசேஜ்கள் வரை முற்றிலும் இலவசமாக அனுப்பும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் மிக உயர்ந்த டேட்டா பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப் பிசினஸ் தனது வணிகச் சேவைகளுக்கான கட்டண முறையை மாற்றியமைத்து வசூலைத் தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டுத் தயாரிப்பான 'அரட்டை பிசினஸ்' தனது இலவச மற்றும் பாதுகாப்பான சேவைகள் மூலம் வர்த்தக உலக மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
