ஜோமெட்டோ டெலிவரி ஊழியர் விநோதம்... வாடிக்கையாளரின் உணவை வேறு நபர்களுக்கு ரூ.100-க்கு விற்ற சோகம்!
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய உணவை அவருக்குக் கொண்டு சேர்ப்பதற்குப் பதிலாக, வேறு இரு நபர்களுக்கு வெறும் 100 ரூபாய்க்கு விற்றுவிட்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. உணவு டெலிவரி துறையில் இது போன்ற விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நுகர்வோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குருகிராம் பகுதியைச் சேர்ந்த ரிஷப் கௌசிக் என்பவர் இரவு நேரத்தில் 'ஜோமாட்டோ' (Zomato) செயலி மூலம் பிரபல உணவகமான 'கடக்க சிங் தா தாபா' வில் இருந்து உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் உணவு வந்து சேராததால், செயலியின் மூலமாக டெலிவரி ஊழியரின் நேரடி இருப்பிடத்தை அவர் பரிசோதித்துள்ளார்.அப்போது, கடந்த 40 நிமிடங்களாக அந்த டெலிவரி ஊழியரின் இருப்பிடம் ஒரே இடத்தில் நகராமல் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் என்ன ஏதென்று நேரில் சென்று பார்க்கத் தீர்மானித்த அவர், தனது வீட்டைவிட்டு வெளியே வந்து டெலிவரி ஊழியரின் இருப்பிடத்தைத் தேடிச் சென்றுள்ளார்.
A Gurugram man claims a Zomato delivery rider sold his food order to two men for Rs 100 after tracking the rider’s location for 40 minutes.
— NewsX World (@NewsX) September 8, 2026
More ▶️ https://t.co/vzKXhK0orw#Zomato #Gurugram #OnlineFood #ZomatoOrder #News pic.twitter.com/zhFlZBHVsq
ரிஷப் கௌசிக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே நடந்த சம்பவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் ஆசையாக ஆர்டர் செய்து வாங்கிய உணவை, அந்த டெலிவரி ஊழியர் வேறொரு 2 நபர்களுக்கு வெறும் 100 ரூபாய்க்கு விற்றுவிட்டு, அவர்கள் அந்த உணவை உட்கொண்டு கொண்டிருப்பதைக் கண்டு அவர் பிடித்துள்ளார்.உணவை டெலிவரி செய்யாமல் வெளி நபர்களுக்கு விற்றதற்கான ஆதார புகைப்படங்களையும், செயலியின் லொக்கேஷன் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் ரிஷப் கௌசிக் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், ஜோமாட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயலை டேக் செய்து, "இது உணவு டெலிவரி சேவை போல இல்லை, முழு அளவிலான உணவுப் பகிர்வுப் பொருளாதாரமாக மாறிவிட்டது" என்று கிண்டலாகவும் வேதனையுடனும் பதிவிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியது. பலரும் டெலிவரி ஊழியரின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்ததோடு, நுகர்வோரின் பாதுகாப்புக் குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் பதிவைக் கவனத்தில் கொண்ட ஜோமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு (Zomato Care) உடனடியாகப் பதிலளித்து, ஆர்டர் ஐ-ஐ (Order ID) பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
