பெங்களூருவில் ‘ஸோம்பி’ பீதி... சிலையாக உறைந்து நிற்கும் இளைஞர்கள்... வைரல் வீடியோக்களின் பின்னணியில் ‘கில்லர்’ போதை மருந்து!

 
ஸோம்பி ஸோம்பி

சமீபகாலமாக பெங்களூரு மற்றும் சில பெருநகரங்களில் இளைஞர்கள் சாலையோரம் வினோதமான முறையில், உடல் விறைத்துப் போய் 'ஸோம்பி' போல உறைந்து நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. ஹாலிவுட் படங்களில் வருவது போல மனிதர்கள் ஸோம்பிகளாக மாறி வருகிறார்களா? என்ற அச்சம் நிலவிய நிலையில், இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மையை காவல்துறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

‘ஸோம்பி’ வீடியோக்கள் உண்மையா?

வைரலாகும் வீடியோக்களில் இளைஞர்கள் மயக்க நிலையில், உடல் ஒரு பக்கமாகச் சாய்ந்து, எவ்வித அசைவும் இன்றிச் சிலையாக நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ஏதோ மாய மந்திரமோ அல்லது வைரஸ் பாதிப்போ அல்ல; இது ஆபத்தான போதைப் பழக்கத்தின் உச்சக்கட்டம் என பெங்களூரு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

போதை இளம்பெண்

மதுவுடன் சில தடை செய்யப்பட்ட மருந்துகளைக் கலந்து உட்கொள்ளும் இளைஞர்கள், சுயநினைவை இழந்து இவ்வாறு 'ஸோம்பி' போலச் செயல்படுகின்றனர்.

இந்த வினோத நிலைக்கு 'ஸோம்பி டிரக்' என்று அழைக்கப்படும் 'சைலாசின்' என்ற மருந்தே காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உண்மையில் சைலாசின் என்பது கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சையின் போது வழங்கப்படும் ஒரு வலிமையான மயக்க மருந்தாகும்.

போதை ஊசி

இதனை மனிதர்கள் உட்கொள்ளும்போது சுவாசக் குறைபாடு, ரத்த அழுத்தம் குறைதல், தசை தளர்வு மற்றும் மிக மோசமாகத் தோல் அழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உடல் பாகங்கள் அழுகத் தொடங்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தப் போதைப் பொருள் கலாச்சாரம், தற்போது இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போதைக்கு அடிமையானவர்கள் நடைபிணங்களாக மாறுவதைத் தடுக்க, காவல்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.