வீடு, மனை சொத்துப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவ.2 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

 
ஆன்லைன் பத்திரப்பதிவு

தமிழ்நாடு பதிவுத் துறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களை மேம்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சில குடும்ப ஆவணங்களை முற்றிலும் காகிதமற்ற முறையில் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மற்றும் நவீன முறை வரும் நவம்பர் 2, 2026 முதல் கட்டாயமாக அமலுக்கு வருகிறது.

குடும்ப ஏற்பாடுகள் தொடர்பான செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்புப் பத்திரம், பாகப்பிரிவினைப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யும் பத்திரம் ஆகிய ஆவணங்களுக்கு இந்த புதிய முறைப் பொருந்தும்.

பத்திரப்பதிவு

பதிவு செய்ய வேண்டிய ஆவணங்களை இணையவழியில் உருவாக்கி, அதனுடன் அவசியமான ஆதார ஆவணங்களையும் குறிப்பிட்ட இணையதளப் பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைப் பதிவுத்துறை மின்னணு முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆவணங்கள் மின்னணு முறையில் பதிவேற்றப்பட்டாலும், ஆவணத்தில் தொடர்புடைய தரப்பினர் தங்களது அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரம் செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராக வேண்டியது கட்டாயமாகும்.

அனைத்துப் பதிவு நடவடிக்கைகளும் நிறைவடைந்த பிறகு, பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நகல் சம்பந்தப்பட்ட நபரின் இணையவழிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், அந்த ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும்.

பத்திரப்பதிவு

இந்தக் காகிதமற்ற பதிவு முறை மூலம், ஆவணங்களை மீண்டும் காகித வடிவில் கையாளுதல், அலுவலகங்களுக்கு இடையே எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற தேவையற்ற சிரமங்கள் பெருமளவில் குறையும். மேலும், பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையும் செயல்திறனும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மென்பொருள் தயார்நிலை, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அலுவலர்களுக்கான உரிய பயிற்சிப் பணிகள் நிறைவடைந்தவுடன் திட்டமிட்டபடி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது).