‘தெறி’ பட சீனை ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... MLA வைக் கைது செய்ய போராட்டம்!
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க. மாவட்ட மாணவரணி சார்பில் நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.

த.வெ.க. தலைவர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில், குற்றவாளியைப் பாலத்தில் தொங்கவிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதனை நினைவூட்டும் வகையில், வந்தவாசியில் உள்ள பாலம் ஒன்றில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் உருவபொம்மையைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு தி.மு.க. மாணவரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பாலத்தில் எம்.எல்.ஏ.வின் உருவபொம்மை தொங்கவிடப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த உருவபொம்மையைக் கீழே இறக்கி மீட்டனர்.

அனுமதியின்றிப் பாலத்தில் உருவபொம்மையைத் தொங்கவிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
