அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார்... உள் புகார் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 
கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து விசாரிக்க, உள் புகார் குழுவை அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி அளித்த மனுவின் அடிப்படையில் இந்தக் குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அரசாணை பிறப்பித்துள்ளார். இக்குழு தனது விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

காகர்லா உஷா தலைமையிலான இக்குழுவில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, போஸ்கோ சட்டத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்ததுடன், வெளிநபர்கள்/சுயாதீன உறுப்பினர்களையும் குழுவில் சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ் திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, காவல்துறை விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.வின் இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ள நிலையில், இந்தக் குழுவின் விசாரணையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.