ஆளுநரை நேரில் சந்தித்த உதயநிதி... தவெக எம்.எல்.ஏ. மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புகார்!

 
ஆளுநர் உதயநிதி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு ஆளுநர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு இன்று காலை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

உதயநிதி

மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. மீது உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் தொடர்பான விவரங்கள் மற்றும் அது தொடர்பான கோரிக்கைகளை ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி

ஏற்கெனவே காவல்துறை விசாரணை மற்றும் உள் புகார் குழு அமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் புகார் அளித்திருப்பது மாநில அரசியலில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.