“2029-க்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்” - அமித்ஷா உறுதி!
இந்தியாவில் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பொது சிவில் சட்டம் தற்போது அமலில் உள்ளது. மேலும், குஜராத், அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதற்கான மசோதாவைச் சட்டமன்றங்களில் நிறைவேற்றியுள்ளன.

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள அனைத்து 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
2014-க்கு முந்தைய ஊழல் மற்றும் வாரிசு அரசியல் நிறைந்த காலத்திலிருந்து மாறி, தற்போது இந்தியா 'செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல்' முறைக்கு முன்னேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'இந்தியாவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையின் அடிப்படையில் அரசின் அணுகுமுறை உள்ளதால், நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தற்போது மிகவும் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
