தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? - இன்று காலை உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு!

 
இடைத்தேர்தல் விராலிமலை அம்பாசமுத்திரம் கரூர்

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று நவம்பர் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், ஆட்சிக்குப் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத சூழலில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறித் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் த.வெ.க.வில் இணைந்தனர். இதன் காரணமாகவும், முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுத் திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ததாலும் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.

இடைத்தேர்தல் விஜய் பிரச்சாரம் பரப்புரை தேர்தல்

காலியான 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பின்னர் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர், த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மீதமுள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளின் முந்தைய தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்கக் கோரி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இடைத்தேர்தல் பிரச்சாரம்

ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்குக் கால அவகாசம் உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 24-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது. இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே, இந்த 5 தொகுதிகளுடன் அண்மையில் காலியான கொளத்தூர் தொகுதியையும் சேர்த்துத் தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.