'TRUTH API' சர்ச்சை - ட்ரம்ப் மீது ஊடக அமைப்புகள் வழக்கு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'TRUTH Social' சமூக வலைதளத்தில் வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே தெரிந்துகொள்ள 'TRUTH API' என்ற கட்டணச் சேவையைத் தொடங்கியதற்கு எதிராக நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
'TRUTH API' சேவையைப் பயன்படுத்தப் பயனாளர்கள் மாதம் $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹84-85 லட்சம்) வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கக் கொள்கைகள், வர்த்தக வரிகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் இச்சேவைக்குச் சந்தா செலுத்துவோருக்கு முதன்முதலில் கிடைக்கும்படி செய்துள்ளார்.

பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையை உடனடியாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட அதிபரின் தகவல்களைப் பெருநிறுவனங்களும் செல்வந்தர்களும் முன்கூட்டியே பெறுவது, பங்குச் சந்தையில் முறையற்ற ஆதாயத்தைப் பெற வழிவகுக்கும் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
'தி இன்டர்செப்ட்' செய்தி நிறுவனம் மற்றும் 'ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் பவுண்டேஷன்' ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றும், ஒரு தனியார் நிறுவனப் பங்குகளை (41% மேல்) தன்வசம் வைத்துள்ள டிரம்ப் இதன் மூலம் தனிப்பட்ட லாபம் அடைவது அமெரிக்க அரசியலமைப்பின் 1-வது மற்றும் 5-வது திருத்தச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சேவைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கட்டண முறையின் கீழ் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஊடக அமைப்புகள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.
