182 கிராம் தங்கம்... ரூ.52 லட்சம் பணம்... கடன் தொல்லையால் அக்கா வீட்டிலேயே திருடிய தங்கை!
கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன் தொல்லை அதிகரித்ததால், சொந்த அக்கா வீட்டிலேயே 182 கிராம் தங்கம் மற்றும் ரூ.52 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து அதிர வைத்திருக்கிறார் தங்கை. கர்நாடக மாநிலம் பெங்களூரு லாகரே பகுதியை சேர்ந்தவர் உமா. உமா பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு உமாவை வற்புறுத்தி வந்தனர். இதனால் கடனை அடைக்க கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் உமா கேட்ட பணத்தை அவர் கொடுக்கவில்லை. இதனால், கடனை எப்படி அடைப்பது, கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி என உமா யோசித்தார்.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டு கடனை அடைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். பெங்களூருவில் உள்ள தனது சகோதரி வீட்டில் கொள்ளையடிக்க உமா முடிவு செய்தார். கடந்த 24ம் தேதி உமாவின் சகோதரி சவுடேஸ்வரி தனது குடும்பத்தினருடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு சென்றார். அக்கா ஊருக்குப் போனதை அறிந்த உமா அன்று பெங்களூரு வருகிறார். இரவு உறவினர் வீட்டில் தங்கினார். அவர்கள் இல்லாத நேரத்தில் உமா அக்கா வீட்டிற்கு சென்று விட்டார்.
போலி சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து, வீட்டின் பீரோவில் இருந்த 182 கிராம் தங்கம் மற்றும் 52 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மேலும், கைரேகைகள் எதுவும் கிடைக்காத வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கிராமத்துக்குச் சென்ற சௌடேஸ்வரி, பூட்டியிருந்த வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீடு முழுவதும் மிளகாய் தூள் தூவப்பட்டிருப்பதை பார்த்த அவர், திட்டமிட்ட கொள்ளை என்பதை உணர்ந்தார். இதுகுறித்து கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் தனிப்படை அமைத்து சவுடேஸ்வரி வீட்டில் கொள்ளையடித்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் உமா வந்து செல்வது போலீசாருக்கு தெரியவந்தது.போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், உமா சவுடேஸ்வரி வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை காவலில் எடுத்துள்ள போலீசார், இதுபோன்ற சம்பவத்தில் முன்னர் ஈடுபட்டாரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடனை அடைப்பதற்காக அக்கா வீட்டில் தங்கை பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!