டெல்லி செங்கோட்டை   கார் வெடிப்பு... குற்றவாளியின் தாய் மற்றும் சகோதரர் கைது!  

 
 

டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு தலைநகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை மெதுவாக இயக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்த வாகனங்கள் பலவும் சேதமடைந்தன. சாலையோரம் பரவலாக கண்ணாடி, உதிரிபாகங்கள் சிதறியதால் அப்பகுதி முழுவதும் பீதி நிலவியது.

சம்பவ இடத்துக்கு டெல்லி போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), தேசிய பாதுகாப்புக் குழு (NSG) ஆகியவை விரைந்து வந்து சிசிடிவி காட்சிகள், தடயங்கள், சாட்சிகள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்து, “எந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது; குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று உறுதியளித்தார்.

வெடிப்பு விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற சந்தேகம் நிலவுகிறது. டெல்லி போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பாரதிய நியாயச் சட்டம் (BNS) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விசாரணையில், காரை இயக்கியது காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி என்பவர் என தெரியவந்துள்ளது. சம்பவத்திற்கு முன் அவர் காரை நீண்ட நேரம் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், பின்னர் மெதுவாக இயக்கியபோது வெடிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில், முகமது உமர் நபியின் தாய் மற்றும் சகோதரரை என்ஐஏ அதிகாரிகள் காஷ்மீரில் கைது செய்துள்ளனர். முகமது உமர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பதையும், வெடிபொருள் எவ்வாறு காரில் பொருத்தப்பட்டது என்பதையும் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்கின்றன.செங்கோட்டை — பாராளுமன்றம் அருகே நடந்த இந்த வெடிப்பு, தேசிய பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு தரப்பில் “பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்” எனவும், விரைவில் விசாரணை முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!