நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி... மேகவெடிப்பால் வெள்ள நீரில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டபோது, உறவினர்கள் கதறித் துடித்தனர். நந்தா நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளனர். சமோலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த கன மழை காரணமாக குந்தாரி லாகா ஃபாலி, குந்தாரி லாகா சர்பானி, சேரா மற்றும் துர்மா ஆகிய 4 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்தப் பகுதி டேராடூனில் இருந்து சுமார் 260 கிலோ மீட்டல் தொலைவிலும், சமோலி மாவட்ட தலைமையகமான கோபேஸ்வரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. சமோலி மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி நந்தா நகரில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். வியாழக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில், குந்தாரி லாகா ஃபாலி மற்றும் துர்மா கிராமங்களிலிருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ், ரிசிகேஷ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் செய்திக்குறிப்பில் 95 பேர் மரியா ஆஷ்ரம் மற்றும் கலா குடோனில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவு மற்றும் மருந்து பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நந்தா நகர் ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரகாசி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மேக வெடிப்பு , கடும் மழை, வெள்ளம் இவைகளால் உத்தரகாண்ட் மாநில மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!