2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழ்நாடு அரசுக்கு, 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி 2,500 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2 சதவீத ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என உத்தரவிடும்படி தங்களது மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தேர்வின் மூலம் நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், யேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாட்சாயினி ரெட்டி, 2,500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக ஏற்கனவே காத்திருக்கும் நிலையில், தனி நீதிபதி உத்தரவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்துவிட்டு, 2500 பேருக்கு நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமன், அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜராகி, தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நேரடி நியமனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும், அடுத்தகட்ட விசாரணைக்காகவும் வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?