விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் | எளிதாக வீட்டிலேயே பிள்ளையார்பட்டி மோதகம் செய்வது எப்படி?

 

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் என விதவிதமான நைவேத்யங்கள் இடம்பெற்றாலும் விநாயகருக்கு மிகவும் பிரியமான மோதகம் முக்கியமான இடத்த்தைப் பிடித்துள்ளது.

அதனால் விநாயகருக்கு பூஜை செய்யும் போது, எந்த பட்சணங்களைப் படையல் போட்டாலும் மோதகத்தை மறக்காதீங்க. குறிப்பாக சூப்பரான சுவையில் பிள்ளையார்பட்டி மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

அதற்கு முன்பாக மோதகம் என்றால் என்ன என்பதைத் தெரிஞ்சுக்கோங்க. துருவிய தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பட்சணம் மோதகம்.இனி ரெசிபியைப் பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

தேங்காய் துருவல் - அரை கப்

வெல்லம் - 2 கப்

நெய்- தேவையான அளவு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்றாக கழுவி தனித்தனியாக உலர வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு கடாயில் பச்சரியை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசியும், பருப்பும் சேர்த்து எத்தனை கப் வருகிறதோ? அதற்கேற்ப வெல்லம் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி லேசாக சூடாக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின் இதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதையடுத்து அடி கனமுள்ள கடாயில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதி வருவதற்கு முன்னதாக அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிவிட்டு 3 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். கட்டி இல்லாமல் அவ்வப்போது கிளறி விடவும். அதன் பின்னர் ஒரு நிமிட இடைவெளி விட்டு, இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கலந்துக் கொள்ளவும்.

பின்னர் இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சூடு குறைந்ததும், கையில் நெய் தடவி விட்டு உருண்டையாக பிடித்து வைக்கவும். தேவைப்பட்டால் அச்சுகளைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு பிடித்து வைத்துள்ள மோதகத்தை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும். சுவையான பிள்ளையார்பட்டி கோவில் மோதகம் தயார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?