திருமணத்திற்கு முன் ஆண், பெண் இடையிலான நெருக்கம் சாதாரணமாகி வருகிறது... உயர்நீதிமன்றம் கருத்து!
திருமணத்திற்கு முன்பாக ஆண் - பெண் நெருக்கம் சமூகத்தில் சாதாரணமாகி வருகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர், மதுரையில் பட்டப்படிப்பு படித்து வந்த போது ஒருவாலிபருடன் பழகி வந்ததாகவும், அவர் திருமணம் செய்வதாகச் சொல்லி உறவு வைத்துக் கொண்டு பின்னர் மறுத்து விட்டதாகவும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, “பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; அதை ரத்து செய்ய வேண்டும்” என அந்த வாலிபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அரசு வக்கீல் அபுல்கலாம் ஆசாத், “மனுதாரர் பெண் வக்கீலை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியுள்ளார்; வழக்கு சட்டப்பூர்வமானது” என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதி அளித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
“மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே 2020ம் ஆண்டில் தொடங்கிய உறவு சில மாதங்கள் நீடித்தது. புகார்தாரர் சட்டம் படித்தவர் என்பதால், உறவில் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்திருக்கிறார். மனுதாரர் ஏமாற்றும் நோக்கத்துடன் நடந்து கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை.
சமூகத்தில் இன்று திருமணத்திற்கு முன் நெருக்கம் சாதாரணமானதாக மாறி வருகிறது. இது கால மாற்றத்தின் விளைவு. உணர்ச்சி ரீதியான ஈர்ப்புக்கும் உடல் ரீதியான உறவுக்கும் இடையிலான கோடு தெளிவாக இல்லை.
இருவரின் உறவு அன்பு நிறைந்ததா, திருமண நோக்கத்துடனா, அல்லது வெறும் உடல் நெருக்கமா என்பதை அவர்களுக்கே தெரியும்; நீதிமன்றம் அதை உறுதிப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தல், ஏமாற்றல் அல்லது இயலாமை இருந்தால் மட்டுமே சட்டம் தலையிடும்.
இருவரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதால், ஒருவர் மற்றொருவர்மீது தார்மீக குற்றச்சாட்டைச் சுமத்தி சட்டத்தை கருவியாகப் பயன்படுத்துவது சரியல்ல. இத்தகைய புகார்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது.” இதனையடுத்து, அந்த வாலிபர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க