தேர்தல் சீர்திருத்தத்திற்காக பாடுபட்ட ஜகதீப் சோக்கர் காலமானார்!
பெரும் கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். இவருக்கு வயது 81. இவர் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனரும் கூட. இவர் சமீபத்தில் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நுரையீரலில் தொற்று பாதிப்பும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானார். ஐஐஎம் - அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு இயக்குநராக இருந்தவருமான ஜகதீப் சோக்கர், தன்னுடைய கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.
அத்துடன் இந்திய அரசியல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வந்தார். ஜகதீப் சோக்கர், தன்னுடைய போராட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தலைமை தாங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னணி மனுதாரர்களில் ஜகதீப் சோக்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரயில்வேயில், மெக்கானிக்கல் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் - அகமதாபாத் பேராசிரியராகவும், பிறகு டீன், பொறுப்பு இயக்குநர் பதவிகளையும் அடைந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, இவர் முழுக்க முழுக்க தேர்தல் சீர்திருத்தத்துக்காகவே பாடுபட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!